Monday, October 18, 2010

ஒரு தலைக் காதல்!


ஒருவன் கொண்ட காதலும் அதனால் அவன் சந்தித்த மாற்றங்களுமே இந்த கவிதை..

உன்னை பார்த்த அந்த நொடியிலே ,
மீள முடியாமல் சிக்கினேன் உன் பார்வையின் அலைவரிசையில் !
என் இருபது வருட வாழ்வில் ஏற்படாத
ஓர் புதிய உணர்வின் வருகை என்னுள்ளே !
என்னை வினவிய படியே நகர்ந்தேன்
புதிதாய் பளிச்சிட்ட சாலையின் நடுவே ..

முற்றிலும் பதிந்த என் நினைவேட்டில்
பளிச்சிட்ட அந்நாளின் பின்னோட்டம் ..!
ஆஹா அவள் இதழ்கள்
ஓசையின்றி இசைக்கும் வீணை நரம்புகள் !
அவளது குரல்
சிலிர்க்க வைக்கும் ஸ்வரம் !
அவளது விழிகள்
அபிநயித்த கவிமொழியில் ,
வீழ்ந்தேன் அவளிடம் முற்றிலுமாய்
அவள் இதயக் கதவின் சாவியை தேடிக்கொண்டே !!

என் கற்பனைக்கெட்டாத பல கேள்விகள் என்னுள் ?!
எண்ணங்களை என்னுள் சிறைபிடித்து என்ன செய்யப்போகிறேன்
சிறகுகள் முளைத்து அவளிடம் அவைகள் பறந்தால்தான் என்ன ?
இப்படி என்னை ஊக்குவிக்கும் உள்ளுணர்வு ஒருபக்கம் ..

இடி முழக்க சப்தமாய் சிதரிடுமோ ?
மேகம் வழிமொழிந்தும் ,
மண்ணை சந்திக்க நிராகரித்த மழை ஆகிடுமோ?
அவள் சிந்தும் புன்னகை கூட திரையிட்டு கொள்ளுமோ ?
என வினாவும் மனம் மறுபக்கம் ..

புதிரான ஓர் பதிலையே அவள் அளிப்பாள் என அறிந்தும் ,
காதலை சொல்ல பிறந்த உத்வேகத்துடன் புறப்பட்டேன் ..
பலவித ஒத்திகை என்னுள்
அவளுடன்
பயணம் செய்ய
முன்னுரையாய் அமைய போகும் அந்த ஒரு வினாடி உரையாடலுக்காக !!
சரிக்கிடும் சக்கரமாய் புறப்பட்ட என் கால்கள் ,
விவேகமாய் அவள் இருப்பிடம் தேடி விரைந்தேன் ..

முகவரியை தவறவிட்ட காற்றைப்போல ,
மறைந்த மின் ஒளியை போல ,
உணர்ந்தேன் அவள் வேறிடம் சென்றுவிட்டாள்
எனக் கேட்டதும் ...

உறைந்த பாறையாய் ,
உருகிய பனிக்கட்டியாய் ,
சுவாசம் உட்கொள்ள முடியாமல் தவித்தேன் ..
வனாந்திரமாய் காட்சியளித்த சாலையில்
ஜீவனற்று பயணித்தேன் ..

சுக்குநூறாய் நொறுங்கிய என் காதல் கோட்டை
வடிவமைக்க எண்ணியும்
அவள் சென்ற திசை ,
அவள் வசிக்கும் சொர்க்கத்தின் விலாசம் ,
அவள் கைபேசி எண்
என எதுவுமே இல்லாத நிலை !

பல வருடங்களுக்கு பிறகு ....

திடீரென வீசும் புயலைப்போல ,
மின்னல் வேகத்தில் பயணிக்கும் நிழலை போல ,
சத்தமின்றி நுழையும் தென்றலை போல ,
நான் வெறித்து பார்த்த திசையிலிருந்து
மரக்கிளைகள் அசைந்தது போல
வண்ணமாய் மிதந்த அந்த இதழ்களின் அசைவுகள் எண் கண்ணெதிரில் !!!
காலங்கள் கடந்து சென்றும் ,
நிரந்திரமான மாற்றங்கள் பிறந்தும் கூட ,
சற்றும் என்னை விட்டு மறையாத அவளது பின்பம்
என் முன்னே நிஜமாய் !!
தூரத்தை கடத்திச் செல்லும் அந்த ரெயில்
அவளையும் அந்த ஒரு நொடி புன்னகையையும் கடத்திச்சென்றதே ..

மௌனமாய் உறங்கிக் கொண்டிருந்த நினைவேட்டில்
மீண்டும் ஏற்பட்ட நிகழ்வுகளின் பயணத்தில் இன்று நான் ..
அவள் எனதில்லை எனினும்
எனதே எனதான செல்ல மகளை
நொடிக்கு பலமுறை அழைக்கிறேன்
என் காதலை கேட்க தவறிய என் காதலியின் பெயரால் !!
மரித்து போன காதலேயாகினும் மறக்க முடியாத நினைவுகளில் என்றுமே நான் ..

4 comments: