Friday, March 8, 2013

மகளிர் தின வாழ்த்துக்கள்


        
        உலகளவில் மகளிர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு எங்கள் கல்லூரியில் நடந்த ஊர்வளத்திற்காய் நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து எழுதிய பதிவு இது...!
       
        பெண்கள் , மௌனம் பேசும் ஆயிரம் மொழிகளின் பிறப்பிடம் . பிறக்கும் நொடியில் தொடங்கி இறுதி வரை பெண்களின் வாழ்க்கை பயணம் விவேகம் நிறைந்தது .
       
      "மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா"
என்ற கவிமணியின் வரிகளுக்கு ஏற்ப அன்பின் உருவாய், பொறுமையின் இலக்கணமாய், பொறுப்புகளின் பிறப்பிடமாய், விஞ்ஞானத்தின் ஊன்றுகோலாய் மங்கையர் திகழ்கின்றனர்.
      
       "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
        பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் "
என்ற பாரதியின் கூற்றை மெய்பிக்கும் வகையில் விண்வெளி தொடங்கி மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அரசியல் என அனைத்து துறைகளிலும் நம் பெண்கள் சாதனைகள் பல நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர்.
      
       அப்துல்கலாமின் "வருங்கால இந்தியா" பற்றிய கனவுகளை நனவாக்கபோகும்  இளைஞர்களை உருவாக்க  கலந்கரைவிலக்கமாய் திகழ்கிறார்கள் பெண்கள். அத்தகைய பெண்களின் கனவுகளையும், உணர்வுகளையும் மதிப்போமாக. 
     
         "பெண் இனத்தை போற்ற பலர் இருந்தும் 
         அதை நடைமுறை படுத்த தவறுகிறது நம் சமூகம்"
தலைமுறைகள் மாறிய பின்னும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. பாரத அன்னையின் மடியில் வாழும் நாம் ஆண், பெண் பேதமின்றி பெண்களை பாரபட்சமின்றி ஊக்குவிக்கும் தேசமாக நாம் இன்னும் மெருகேற வேண்டும். அண்ணல் காந்தியடிகளின் முழுசுதந்திர கனவு, இன்னும் கனவாகவே உள்ளது. பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளித்து, அவருடைய கனவினை நனவாக்கிட வேண்டும். குற்றங்கள் நிகழா வண்ணம் , சட்டதிட்டங்கள் காலத்திற்க்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
      
         மக்கள் தொகையில் சமபாதியாக பெண்கள் இருந்தும், இந்த ஆண்டு நிதியறிக்கையில் பெண்களுக்காக நிருபயா, பெண்களுக்கான பிரத்யேக வங்கிகள் மற்றும்  சுய உதவிக் குழுக்கள் என பல வழிமுறைகளை நடைமுறைப்படுத்த முன்வந்தும் கூட , 33% இடஒதுக்கீடு அளிக்க இன்னமும் சட்டதிட்டங்கள் யோசித்து கொண்டே இருக்கின்றன. 
      
         நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை 
         நிலத்தில் பார்க்கும் அஞ்சாத நெறிகளும் 
         நிமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் 
         செம்மை மாதர் திறம்புவதில்லையாம் 
என்ற பாரதியின் வார்த்தைகளின் வடிவாய் உள்ளனர் இந்நாட்டு பெண்கள். பெண்களுக்கு அவர்களுக்குரிய அங்கீகாரத்தினை அளித்தால், நம்மால் இன்னும் எத்தனையோ கல்பனா சாவ்லா, ஜான்சி ராணி, சானியா மிர்சா, சந்தா கோச்சார், கிரண் பேடி, இந்திரா நூயி போன்ற மாபெரும் திறன் கொண்ட பல சாதனையாளர்களை நம்மால் உருவாக்க முடியும்.
      
         கண்ணின் இமைபோல் பார்த்துக்கொள்ளும் அன்னையில் தொடங்கி, ஊக்குவித்த பள்ளி தோழி, வாழ்வை உணர வைத்த கல்லூரி சிநேகிதி, தன் ஆற்றல்கள் இது தான் என உணர வைத்த ஆசிரியை என்று பல பரிமாணங்களில் நம் வாழ்வின் முக்கிய அங்கமாய் விளங்கும் பெண்களை தலைவணங்குவோம். பாரதி கண்ட புதுமை பெண்களை உருவாக்க காரணிகளாய் திகழ்வோம்!  
                                            இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment