Saturday, October 23, 2010

சமர்ப்பணமாய்..


என் பிறப்பின் போது அறியவில்லை
என் வாழ்வை உங்களோடு செலவிடுவேன் என்று !
அன்பென்னும் பெருங்கடலில் மூழ்கியதில்லை
அன்பின் முகவரியை நீங்கள் என்னுள் புகுத்தும் வரை!
என் புன்னகையை ரசித்தது இல்லை
நீங்கள் என்னோடு நகைக்கும் தருணம் வரை !
நீர்வீழ்ச்சியாய் விழும் என் கண்ணீர் துளியை எவரும் திருடியதில்லை
திருடுவதற்கு உங்கள் கரம் வரும்வரை !
தனியே துடிக்கும் என் இதயத்தின் பாரத்தை இறக்கியதில்லை
சுமைதூக்கியாய் என் வாழ்வில் நீங்கள் வரும்வரை !
என் காலச்சக்கரங்கள் அசைந்ததில்லை
என் பயணத்தில் நீங்கள் நிறைந்திருக்கும் வரை!
என் துயரத்தில் தோள் கொடுத்து ,
என் இன்பத்தில் மத்தாப்பாய் சிரித்து,
என் வெற்றியில் சூரியனாய் மெருகூட்டி,
என் தோல்வியில் சுவாசமாய் உடனிருந்து ,
என் தனிமையின் இருப்பிடத்தை தொலைக்கவைத்து,
மறைமுகமாய் ஒவ்வொரு நொடியும் என்னை நேசித்து ,
தனியே என்னை தரிசு மரமாய் வாழவிடாமல்
பூஞ்சோலையாய் வாழவைக்கும் என் நலம்விரும்பிகளை ,
இமயங்களையும் தாண்டி
நேசிக்கிறேன்

Dedicated to my brother and sisters..

Monday, October 18, 2010

ஒரு தலைக் காதல்!


ஒருவன் கொண்ட காதலும் அதனால் அவன் சந்தித்த மாற்றங்களுமே இந்த கவிதை..

உன்னை பார்த்த அந்த நொடியிலே ,
மீள முடியாமல் சிக்கினேன் உன் பார்வையின் அலைவரிசையில் !
என் இருபது வருட வாழ்வில் ஏற்படாத
ஓர் புதிய உணர்வின் வருகை என்னுள்ளே !
என்னை வினவிய படியே நகர்ந்தேன்
புதிதாய் பளிச்சிட்ட சாலையின் நடுவே ..

முற்றிலும் பதிந்த என் நினைவேட்டில்
பளிச்சிட்ட அந்நாளின் பின்னோட்டம் ..!
ஆஹா அவள் இதழ்கள்
ஓசையின்றி இசைக்கும் வீணை நரம்புகள் !
அவளது குரல்
சிலிர்க்க வைக்கும் ஸ்வரம் !
அவளது விழிகள்
அபிநயித்த கவிமொழியில் ,
வீழ்ந்தேன் அவளிடம் முற்றிலுமாய்
அவள் இதயக் கதவின் சாவியை தேடிக்கொண்டே !!

என் கற்பனைக்கெட்டாத பல கேள்விகள் என்னுள் ?!
எண்ணங்களை என்னுள் சிறைபிடித்து என்ன செய்யப்போகிறேன்
சிறகுகள் முளைத்து அவளிடம் அவைகள் பறந்தால்தான் என்ன ?
இப்படி என்னை ஊக்குவிக்கும் உள்ளுணர்வு ஒருபக்கம் ..

இடி முழக்க சப்தமாய் சிதரிடுமோ ?
மேகம் வழிமொழிந்தும் ,
மண்ணை சந்திக்க நிராகரித்த மழை ஆகிடுமோ?
அவள் சிந்தும் புன்னகை கூட திரையிட்டு கொள்ளுமோ ?
என வினாவும் மனம் மறுபக்கம் ..

புதிரான ஓர் பதிலையே அவள் அளிப்பாள் என அறிந்தும் ,
காதலை சொல்ல பிறந்த உத்வேகத்துடன் புறப்பட்டேன் ..
பலவித ஒத்திகை என்னுள்
அவளுடன்
பயணம் செய்ய
முன்னுரையாய் அமைய போகும் அந்த ஒரு வினாடி உரையாடலுக்காக !!
சரிக்கிடும் சக்கரமாய் புறப்பட்ட என் கால்கள் ,
விவேகமாய் அவள் இருப்பிடம் தேடி விரைந்தேன் ..

முகவரியை தவறவிட்ட காற்றைப்போல ,
மறைந்த மின் ஒளியை போல ,
உணர்ந்தேன் அவள் வேறிடம் சென்றுவிட்டாள்
எனக் கேட்டதும் ...

உறைந்த பாறையாய் ,
உருகிய பனிக்கட்டியாய் ,
சுவாசம் உட்கொள்ள முடியாமல் தவித்தேன் ..
வனாந்திரமாய் காட்சியளித்த சாலையில்
ஜீவனற்று பயணித்தேன் ..

சுக்குநூறாய் நொறுங்கிய என் காதல் கோட்டை
வடிவமைக்க எண்ணியும்
அவள் சென்ற திசை ,
அவள் வசிக்கும் சொர்க்கத்தின் விலாசம் ,
அவள் கைபேசி எண்
என எதுவுமே இல்லாத நிலை !

பல வருடங்களுக்கு பிறகு ....

திடீரென வீசும் புயலைப்போல ,
மின்னல் வேகத்தில் பயணிக்கும் நிழலை போல ,
சத்தமின்றி நுழையும் தென்றலை போல ,
நான் வெறித்து பார்த்த திசையிலிருந்து
மரக்கிளைகள் அசைந்தது போல
வண்ணமாய் மிதந்த அந்த இதழ்களின் அசைவுகள் எண் கண்ணெதிரில் !!!
காலங்கள் கடந்து சென்றும் ,
நிரந்திரமான மாற்றங்கள் பிறந்தும் கூட ,
சற்றும் என்னை விட்டு மறையாத அவளது பின்பம்
என் முன்னே நிஜமாய் !!
தூரத்தை கடத்திச் செல்லும் அந்த ரெயில்
அவளையும் அந்த ஒரு நொடி புன்னகையையும் கடத்திச்சென்றதே ..

மௌனமாய் உறங்கிக் கொண்டிருந்த நினைவேட்டில்
மீண்டும் ஏற்பட்ட நிகழ்வுகளின் பயணத்தில் இன்று நான் ..
அவள் எனதில்லை எனினும்
எனதே எனதான செல்ல மகளை
நொடிக்கு பலமுறை அழைக்கிறேன்
என் காதலை கேட்க தவறிய என் காதலியின் பெயரால் !!
மரித்து போன காதலேயாகினும் மறக்க முடியாத நினைவுகளில் என்றுமே நான் ..

Sunday, October 17, 2010

என் நிலை..


நிலவோடு தேய்கிறேன் ,
கனவோடு கரைகிறேன்,
உயிரோடு அஸ்தமாகிறேன்,
மெழுகோடு உருகினேன் ,
மழையோடு கலங்கினேன் ,
கண்ணீரோடு வீழ்ந்தேன் ,
காற்றோடு தவிக்கிறேன் ,
மௌனமோடு உலவுகிறேன் ,
நீ இன்றி என் நிலை இது !
நான் இன்றி உன் நிலை இனிது !
இருந்தும் கூட உன் நினைவுகளில் ஜீவிக்கிறேன்..

Tuesday, October 12, 2010

கடைசி நாளான அன்று..


அண்மையில் ஏற்பட்ட கௌதமின் மறைவிற்கு சமர்ப்பணமாய் இந்த பதிவு ...


பழைய நிகழ்வுகள் புதைந்து ,
புதிய கனவுகள் புகுந்து ,
அம்மாவின் செல்ல முத்தத்தோடு,
தந்தையின் அன்பான அரவணைப்போடு ,
தொடங்கியது அவன் வாழ்வில் மீண்டும் ஒரு நாள் !

எத்தகைய அடைமழைக்கும் இறுதி மழைத்துளி உண்டு ,
பளிச்சென வெளிச்சமூட்டும் பகலுக்கும் இரவு உண்டு ,
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பிலும் ஒருதுளி கண்ணீராது உண்டு ,
ஏன் இப்படி கடவுளின் ஒவ்வொரு படைப்பிலும் ஓர் இறுதி ?!!

மகனின் வருகையை காத்திருந்த பெற்றோர் ,
தோழனின் கரத்தை பிடிக்க எண்ணி காத்திருந்த நண்பர்கள்,
பலகோடி சிந்தனை செதுக்கள்களுடன் இருந்த அவனது மனம் ,
இப்படி எதையுமே பொருட்படுத்தாமல்
கண் சிமிட்டும் மணிப்பொழுதில் நடந்த அந்த அகோர விபத்து
எதிர்பாராமல் அவன் வாழ்வின் கடைசி நாளாய் அந்நாள் :(
உயிரை இறுக்கி நெருக்கிய கடைசி நிமிடங்கள் ,
சுவாசத்திற்கு சிக்காமல் சீறிச் சென்ற காற்று ,
உறைந்து போய் உதவ மறுத்த மனிதர்கள் ,
பல நாள் கூடவே ஓடிய வாகனம்
கையை விட்டு ஓடிய அவலம் ,
இப்படி அனைத்தும் அவனுக்கு கைகொடுக்காத நிலை !

உறங்காமல் வளர்த்த பெற்றோரின் வலி ,
விரல் தொட்டு விளையாடிய சகோதரர்களின் ஏக்கம் ,
உயிருக்கு உயிராய் இருந்த நண்பர்களின் கண்ணீர் ,
அவன் நின்ற இடம் தொட்டு நினைவோடு சருகிச் செல்லும் காலம் ,
இவையனைத்திற்கும் கடவுளின் பதில் தான் என்ன ?!

விழிவிளிம்பில் விழுகின்ற கண்ணீர் சப்தம் ,
மனக்கூண்டில் வந்து வந்து போகும் அவனது புகைப்படம் ,
செவியின் வாசலில் அவன் பேசிய சொற்களின் ஒலி,
இப்படி உயிரில்லா உணர்வுகளை கொடுத்துவிட்டுச் சென்றாயே !

உன்னோடு உறவாடிய நினைவுப்பந்தலில்
இன்று அனைவரும் உலவுகிறோம்..
உனது உயிர் பிரிந்தது எனினும்
அனைவரின் உள்ளங்களில் ,
உயிர் தோழனாய் ,
ஆசை மகனாய் ,
பிடித்த மாணவனாய்,
நல்ல ஆன்மாவாய் என்றுமே வாழ்கிறாய்..!

Saturday, October 9, 2010

நீ எனதாக !


விண்மீனாக ஆசைப்படுகிறேன்,
எந்நேரமும் உன்னை பார்த்து கண் சிமிட்ட!
தென்றலாக வேண்டுகிறேன்,
உன்னை அனுமதியின்றி தழுவும் அந்த உரிமைக்காக!
மழைத்துளியாக தவிக்கிறேன்,
உன் கரங்களில் என்னை நீ சேமிக்கும் அந்த ஒரு நொடிக்காக!
சாலையாக எண்ணுகிறேன்,
உன் பாதச்சுவடுகளின் பிறப்பை என் மீது ஏற்க!
பூவாக பூக்க நினைக்கிறேன்,
நீ பறித்து முத்தமிடும் உரிமையை எனக்கே சொந்தமாக்கிக்கொள்ள!
காகிதமாக தவிக்கிறேன்,
நீ எழுதும்போதெல்லாம் உன் முகத்தின் அழகை என் மீது பதிக்க!
மேகத்தால் திரையிடப்பட்ட வானமாய் இருக்க ஆசைப்படுகிறேன்,
ஒரு முறையாது நீ அறியாமலே உன் எண்ணங்களை திருடிச் செல்ல!
நீ எனதாகவே இருக்க போராடுகிறேன்
நீயும் நம் நினைவுகளும் என்றுமே எனதாகவே இருக்க !

Wednesday, September 29, 2010

நம் நட்பு


காரிருள் சூழ்ந்த பொழுதிற்கு ,
ஒளியேற்றிய சூரியனாய் ..
அசைவின்றி அயர்ந்த பொய்கையை ,
எழுப்பிய முதல் கல்லாய் ..
கற்களை செதுக்கிய சிற்பிக்கு ,
வடிவம் கொடுத்த உருவமாய் ..
மேகத்தின் சுமையை குறைத்த,
முதல் மழைத்துளியாய் ..
கருப்பு வெள்ளை படலம் கொண்ட வானத்திற்கு ,
வண்ணங்களை சேர்த்த வானவில்லாய் ..
உறைந்த நேரத்தை கடத்திச் செல்லும்
கடிகார முள்ளாய்..
உதிர்ந்த பூக்களை அரவணைக்கும்
பூமியாய் வந்தாய் என் வாழ்வில் மெல்லிசையாய் !
என் புன்னகையின் ரசிகனாய் ,
என் அழுகையின் எதிரியாய் ,
என் தேடல்களின் துணையாய் ,

என் புலம்பல்களுக்கு செவியாய்,
நான் அறியாத உலகிற்கு விழிகளாய் ,
என் இதயத்திற்கு உயிராய் ,
என் வாழ்வின் இறுதிவரை நீ வேண்டும் நட்பாய்..
ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷமாகும்
நம் நட்பின் பயணத்திலே இன்று !
இன்று மட்டும் அல்ல என்றென்றுமே !!

Monday, August 23, 2010

சாலையோர காகிதம் !


தினம் தினம் பலகோடி காகிதங்களை சாலையில் காண்கிறோம் ,
என்றுமே அதனை நாம் சிந்திக்க தவறிவிடுவோம் ..அதனை பற்றிய கவிதை தான் இது ,

கைகளில் சிறையாய்,
காலடியில் சருகாய் ,
குப்பையில் ஜடமாய் ,
இருக்கும் காகிதத்தில் உள்ள உயிர் தான் என்ன ?!

விழியில் தொடங்கி ,
வழியில் முடிந்த
காதல் காவியமாக கூட இருக்கலாம் !
தினம் தினம் சேகரித்த காதல் ,
இன்று பறக்கும் காகிதமாய் ,
பறக்கும் திசை தெரியாமல் சாலையில் !!

நண்பனின் கையெழுத்தை ,
பொக்கிஷமாய் சேகரித்த முத்தாய் கூட இருக்கலாம் !
அருகாமை தான் என்றும் கிடைப்பதில்லை
அவன் செதுக்கிய எழுத்துக்களையாது சேகரிக்க
எண்ணிய மனதின் வலி தான் என்னவோ?!

இயற்கையின் துணையில் ,
காற்றின் வீச்சில் ,
காகிதத்தை நனைத்த மழையை
அன்போடு இழுக்கும் சூரியனின் சக்தியில் ,
காகிதம் ஓவியமாகவே இருப்பிடம் செல்ல வேண்டுகிறேன் !
சென்றாலும் செல்லாவிட்டாலும் ,
இருப்பது சாலையாகினும், குப்பைத்தொட்டியாகினும் ,
நம் மனதின் எண்ணங்களை என்றுமே கொட்டும்
அந்த காகிதம் என்றுமே ஓவியம் தான் !!