Thursday, April 22, 2010

எனக்காய் !!


என் தோழி என்னை பற்றி எழுதிய கவிதை.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதனை பார்த்து.. அருமையாக கவிதை எழுதுவாள்.. காகிதங்களில் மட்டும் அல்லாமல் அதனை ப்ளாக்- லயும் சேகரிக்க எண்ணினேன் ... இதோ அந்த கவிதை ...

சுபமே !
உன்னை பற்றி கவிதை எழுதி கேட்டாய்
விரிந்து கிடக்கும் வானத்தை
பற்றி எழுத நான் ஒன்றும் கம்பன் அல்ல!
எனினும் எழுத முயற்சிக்கிறேன் ..
வார்த்தைகளை தேடி கொண்டே !

உன்னை முதல் முதலில் பேருந்தில் தான்
சந்தித்தேன் ..
அப்போது புரியவில்லை நீ
என் வாழ்க்கை பயணத்திலும் வருவாய் என்று !

உன்னை பார்த்து வியந்த நிமிடங்கள் சில
உன்னை பார்த்து மகிழ்ந்து நகைத்த நிமிடங்கள் பல ..
வியந்த நிமிடங்கள் ..
பலர் உன் பேச்சிற்காக புகழ்ந்த போது ..
ஏன் நானும் கூடத்தான் !!
நகைத்த நிமிடங்கள் ...
உன் செல்ல குறும்புகளின்
நகைச்சுவை பந்தியில் !!

உன் கண் அசைவுகளில்
உணர்ந்தேன்
உன் தனிமைகளை ,
இனிமைகளை ,
உன்னை இறுதியில் !!

உன்னை இறுதியில் அறிந்தாலும்
இறுதி வரையில் உன்னுடன் இருப்பேன்
இறுதி வரை என்றால் என் இறுதி வரை !!

உன் திருமணத்தை பார்க்க
ஆசை என்று கூற மாட்டேன் !
ஆனால் உன் பேத்தியின் கல்யாணத்திலும்
உன்னை பார்க்க ஆசை ...

என் ஆசை நிறைவேறும்
நிச்சயமாக ..
அதுவரை சுகமாய் இருக்க
என் சுபத்திர்க்கு !!

நட்பு


இந்த கவிதை அன்பு பரிசாய் என் நண்பன் அழித்தது.. இது அவன் சொந்த படைப்பு இல்லை எனினும் பிடித்தது ..

மூன்று எழுத்தில் மனசும் மனசும் பேசி கொண்டல்
வார்த்தை கிடையாது .
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு
பிரிவு கிடையாது ..

உறவை நேசிப்பதை விட
உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம்
கொண்டாலும் சுகமாக தோன்றும் ..

உயிருக்கு உயிராய் இருந்து
உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து
உயிர் கொடுக்கும் நட்பு மேலானது ..

நான் உனக்கு உயிர் தோழனாக
இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் என் உயிர் உள்ளவரை
நல்ல தோழனாக இருப்பேன் ...

Friday, April 2, 2010

என்றும் மறப்பதில்லை !



ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கை யிலும் கடவுள் நட்பு , காதல் , சொந்தங்கள் அனைத்தையும் செதுக்க மறந்ததில்லை .. உயிரே உறவுகள் தான் என்று என்னும் வேளையில் பிரிவை கொடுக்கவும் கடவுள் மறந்ததில்லை ..பிரிவின் வலி கொடியது தான் அந்த பிரிவிலும் நினைவுகளின் தாக்கம் என்றுமே சுகம் தான் .. வாழ்வின் பயணத்தை பற்றி எண்ணி கொண்டிருந்தேன் அப்போது தோன்றிய கவிதை தான் இது ..

பாலமிட்ட உறவுகளை புயல் அடித்தாலும் ,
பாலம் அமைத்த நினைவுகளை எதுவாலும் அழிக்க முடியாது !
செல்லக் கனவுகளை விழித்ததும் மறந்தாலும் ,
கனவின் பாதச்சுவடை மனம் மறக்க முடியாது !
இளமை கால நிகழ்வுகளை காலம் கடத்தி சென்றாலும் ,
நாடி உள்ளவரை சிறு நிகழ்வையும் கூட நினைவு கூறாமல் இருக்க முடியாது!
எண்ணச் சிறகுகளை எவர் வெட்டி போட்டாலும் ,
விழிகளின் கவி மொழியை எவராலும் அசைக்க முடியாது !
பிரிவு பரிவு காட்ட தவறி ,
நேசித்த உறவுகளை பிரிக்க தவறவில்லை ...
எனினும் அன்பை வானமாய் விரித்துள்ளோம்
என்றோ ஒரு நாள் எங்காவது சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் !!
சுனைநீராய் இருந்த வாழ்க்கை ,
பாலைவானமாய் காட்சியளிக்கிறதே !
நினைவோடு உறவாடி நெடுநேரம் பேசிவிட்டேன் ,
நினைவுகளை நினைக்க மறந்தாலும் ,
மறக்க நினைத்ததில்லை ..
மரித்தாலும் மறக்கபோவதில்லை !!

Sunday, March 14, 2010

விடியலின் தேடலில்


அனுதின வாழ்வின் அங்கமாகிவிட்ட துயரம் ,
புன்னகையை மறந்த இதழ்கள் ,
கண்ணீர் துளியை சேகரித்த விழிகள் ,
இரண்டும் நடத்தும் நாடக விழாவில்
உணர்ச்சிகளற்ற உயிராகவே ஆனேன் ஓர் நாள் !
கதறி அழுக தோன்றும்
எனினும் விட்டில் பூச்சியாக புன்னகைக்கிறேன்
புன்னகையில் ஒளிந்திருக்கும் கண்ணீரை யார் அறிவாரோ ?
வாழ்வின் இலையுதிர் காலம் இவை தானோ ?!
மறுபடியும் தழைப்பது எப்போதோ ?
நொடிகளின் அசைவில் அடிகள் அதிகரித்தன ,
எனினும் அதனில் வீழ்ந்து விடவில்லை ,
நிரந்தரமான விடியலின் தேடலில்
என்றுமே நான் நானாகவே !!

Saturday, February 6, 2010

என்றும் அழியாத காதல் !


என் கண்கள் ஏங்கியும்
விழிக்கமுடியவில்லை,
நெடுநீள பயணம் முடிவடைந்ததேனோ ?!
உறக்கத்திலே தொலைந்ததும் ஏனோ ?!
கனவுகள் உறைந்ததை உணர்ந்தேன் ,
உணர்ச்சிகள் செயல் இழந்ததை உணர்ந்தேன் ,
எனினும் நினைவுகளின் உயிரோட்டம் என்னுள்ளே!!
அய்யோ..
நான் நித்தமும் மூழ்கிய உன் மூச்சில்
இனி மூழ்க முடியாமல் போனதேனோ ?!
உன் கரங்களின் செல்ல சிறையில் ,
இனி பயணிக்க முடியாததேனோ ?!
உன் மார்பில் உறங்கிய தூக்கத்தை தொலைத்து ,
நிரந்தரமாய் தூங்கிய அவலம் ஏனோ ?!
என் இயலாமையையும் மீறி ,
என் காதலை சொல்ல தவித்தேன் ,
சொல்ல மறந்த காதல் ஆனதேனோ ?!
கண்ணில் நிறைந்த ஏக்கம் ..
நெஞ்சில் நிறைந்த உனது தாக்கம்..
இறுதி துடிப்பில் நிறைந்த உனது சுவாசம் ,
என் இறுதி பொக்கிஷமாய் !!
இறந்தேன் நிரந்திரமாய் ,
வாழ்வேன் உன்னில் நிரந்திரமாய் ,
மறித்தும் காதலிக்கிறேன் உன்னை ,
இன்னும் வாழ்கிறாயே என்னுள் !!

Saturday, January 9, 2010

நினைவுகள்


நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது,
முடிவில்லாமல் ...

நாம் பேசி சிரித்த
நொடிகளுக்கு சாட்சியாய்
நின்ற மரங்கள் !
அதனிடமும் மௌனம் ?!!

நாம் அமர்ந்த சாலையோர இருக்கைகள் ,
நான் தனியே வருவேன்
என அறிந்ததோ என்னவோ?!
அதிலும் ஒரு சேதம் !
நீ இன்றி தனித்து வந்த வருகையை
சற்றும் எதிர்பார்க்காத இருக்கை!!

நாம் சென்ற பாதையில்
நம் சுவாசம் நிறைந்த காற்றில்
இன்று ஒரு வெறுமையை கண்டேன் !
காற்றும் கூட உன் தேடலில்தான்
சுற்றித்திரிகிறது ஓயாமல் !!

நாம் சென்ற போது
இசையை ஒலித்த
பறவைகளின் சப்தம் ,
இன்று அவைகள் கூட
என் செவியில் சோகமாய் !
யாருக்கு தெரியும்?
அந்த பறவைகளின் பேச்சு கூட
நம்மை பற்றியதாக இருக்கலாம் ?!

உன் பார்வை காட்டிய பரிவு,
உன் அன்பில் நனைந்த கோவம்,
உன் புன்னகையில் நிறைந்த உன் மொழிகள் ,
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்,
அனைத்தையும் எண்ணி கரைந்த நொடிகள்
நொடிகள் மட்டும் அல்ல கண்ணீரும் கூடதான்!

வெகு தொலைவில் ,
வானம் முடியும் புள்ளியில் ,
மறைந்து போனது பகல் ,
உன்னைப் போலவே!!
முடிந்து போன நம் பயணம் ஒரு பக்கம் ,
தொடர்ந்த உன் நினைவுகள் மறுபக்கம் !
இன்றும் உன் நினைவுக
ளில்..
என்றும் முடிவடையாத பயணமாய் !

Wednesday, January 6, 2010

பிடித்தவைகள் !



காலை நேர பறவைகளின் கூக்குரல் பிடிக்கும் ,
குளிரில் இதமான சூரியனின் ஸ்பரிசம் பிடிக்கும்,
புல்வெளியில் கண்ணயர பிடிக்கும் ,
பனித்துளியை பார்த்து கொண்டே இருக்க பிடிக்கும் ,
உதிரும் பனியில் சூடாய் தேநீர் அருந்த பிடிக்கும் ,
மெல்லதளுவும் காற்றின் வருடல் பிடிக்கும் ,
வெள்ளம் போல கொட்டும் அருவியில் நிற்க பிடிக்கும் ,
கடலில் கால் நனைக்க பிடிக்கும் ,
பௌர்ணமி நிலவை இமைக்காமல் ரசிக்க பிடிக்கும் ,
நட்சத்திரங்கள் கண்ணடிப்பது பிடிக்கும் ,
மழலையின் கொஞ்சும் பேச்சு பிடிக்கும் ,
சிறு குழந்தையின் வருடல் பிடிக்கும் ,
கொட்டும் மழையில் தனியாக நனைய பிடிக்கும் ,
மழையில் நனைந்ததற்கு அம்மாவின் ,
கோபம் கலந்த அன்பு சிணுங்கள் பிடிக்கும் ..
தனிமையில் இசையின் அரவணைப்பு பிடிக்கும் ,
தவறாமல் வரும் நினைவுகளின் வருகை பிடிக்கும் ,
வெட்டவெளியில் ஊஞ்சலாட பிடிக்கும்,
பேசி கொண்டே இருக்க பிடிக்கும் ,
சில தருணங்களில் மௌனம் பிடிக்கும் ,
மௌனத்தின் ஆதிக்கத்தில் கவிதை எழுத பிடிக்கும் ,
நண்பர்களின் அருகாமை பிடிக்கும் ,
நேசிக்கும் உறவுகளின் அன்பு தொல்லை பிடிக்கும்,
உயிரான உறவுகளிடம் கோபம் கூட பிடிக்கும் ,
எனக்கு பிடித்தவைகளை (ப)பிடிக்கும்,
அணைத்து இதயங்களையும் பிடிக்கும் !!